என்னை அழைத்த பூ நாரைகள் - புத்தளம் பயண அனுபவம் (07-12-2025)
என்னை அழைத்த பூ நாரைகள் - புத்தளம் பயண அனுபவம் (07-12-2025)
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை(07-12-2025) வழக்கம் போல் பறவை பார்க்கக் கிளம்பினேன். எப்போதும் பறவை பார்க்கும் மணக்குடி உப்பளங்களில் இம்முறை செல்லாமல் புத்தளம் பகுதியை சுற்றியுள்ள உப்பு அளங்களில் பார்க்கலாம் என்று முடிவெடுத்து சென்றேன். என் ஸ்கூட்டியில் பைனாகுலருடன் சென்றேன். பபுத்தளத்தில் பூ நாரை பறவை இனங்கள் இருப்பதாக இணையத்தில் பார்த்திருந்தேன். பூ நாராயை பார்க்க வேண்டும் என்பது வெகு நாள் கனவு.
அஞ்சுகிராம் வழியாக மயிலாடி சென்று அங்கிருந்து மணக்குடி செல்வது தான் திட்டம். செல்லும் வழியிலேயே மயிலாடி தாண்டிய பின் வயல் வேளிகளில் புது வகையான ஒரு பறவையை பார்த்தேன். அது நாரை வகையை சார்ந்தது. கழுத்தில் வெள்ளையும் தலை மற்றும் உடலின் பிற பகுதியில் கருப்பு நிறமும் கொண்ட பறவை. இந்த பறவையை ஏற்கனவே கர்நாடகா பயணத்தில் ஒரு முறை பார்த்துள்ளேன்.
அதன் பெயர் தெரியாமல் நாஞ்சில் பாலாவிடம் கேட்டேன். அவர் ஒரு புறம் தேட நான் மற்றொரு புறம் தேடி அதன் பெயரை கண்டுபிடித்தோம். அது Asian Woolly necked stork எனும் ஆசிய கம்பளி கழுத்து நாரை. இது ஆசியாவில் வயல் வெளிகளில் பொதுவாக காணப்படும் பறவை தான். ஆனால் எனக்கு அதன் தோற்றம் ஓரு திகைப்பைத் தரவே அங்கேயே வெகு நேரம் நின்று அதன் நடவடிக்கையை கவனித்தேன். நான் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு ஐம்பது அடி தொலைவில் அது இறையை எதிர்பார்த்து நின்றது.
நான் பார்ப்பதை அது பார்த்துவிட்டது போல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றது. அதை பார்த்த இனிமையில் அப்படியே பயணத்தை தொடர்த்தேன். மணக்குடியில் வழக்கம் போல் அளங்களில் புதிதாக ஏதாவது பறவை தென்படுகிறதா என்று பார்த்துவிட்டு அப்படியே நகர்ந்த. புத்தளம் நோக்கி பயணித்தேன். அன்றைய காலை உணவு செல்லும் வழியில் குடித்த இரண்டு tea மட்டுமே.
புத்தளம் சென்று எங்கு செல்லவேண்டும் என்று ஏற்கனவே கூகுள் வரைபடத்தில் பார்த்திருந்தேன். அந்த வழியே சென்றேன்.உப்பளத்தை அடைந்துவிட்டேன்.ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பிறகு கூகுள் வரைபடமும் என்னை குழப்பிவிட அங்கும் இங்கும் அலைந்தேன். பின் நடப்பது நடக்கட்டும் என்று கைபேசியை பைக்குள் வைத்துவிட்டு கண் போன போக்கில் சென்றேன். ஒரு குறிப்பிட்ட தூரம் செல்லவும் ஏதோ தோன்ற சாலையை விட்டு இறங்கி வலப்பக்கமாக இருந்த கோவிலை நோக்கி சென்றேன்.
சுற்றி உடை மரங்கள் சூழ்ந்த வெளி. உடை மரத்திற்கு அந்த பக்கம் குளம். அந்த கோவிலை ஒட்டி இருந்த ஒற்றை அடி பாதையில் என்ன நினைத்துப் பயணித்தேன் என்று தெரியவில்லை சற்று நேரத்தில் குளத்தின் கறையை அடைந்தேன். அங்கு வெள்ளை நிறத்தில் வெயிலில் ஜோலித்த படி பறவை கூட்டம் நின்றது. தூரத்தில் இருந்து பார்க்க கொக்குகள் போல் தோற்றம் அளித்தன. ஆனால் கொக்குகள் கூட்டமாக இப்படி ஒரே இடத்தில் நிற்பதை பார்த்ததில்லை. அதன் அலகுகள் கீழ்நோக்கி வாழைந்திருப்பதை பார்த்தேன்.
அது தான். அதுவே தான். நான் தேடி வந்த கூட்டம் இது தான். ஐம்பது அடி தூரத்தில் என் கனவில் நான் கண்ட பறவை கூட்டம். பூ நாரைகள். கூட்டு தியானம் செய்வது போல் அனைத்தும் அங்கேயே நின்றன. சில என்னைப் பார்த்து நகர ஆரம்பிக்கவே மற்றவையும் நகர ஆரம்பித்தன. அதன் தியானத்தை நான் கலைத்து விட்டேன் பொழலும். அதை தொந்தரவு செய்யாமல் அப்படியே உக்கார்ந்துவிட்டேன். எண்ணங்கள் இல்லாமல் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
சில நாரைகள் அவ்வப்போது கழுத்தை வளைத்து பிறவற்றோடு விளையாடுவதை கவனித்தேன். அல்லது அது சண்டையா என்பதை நான் அறியேன். நண்பர்கள் நினைவு வரவே பாலாவிற்கும் சுத்தனுக்கும் போன் செய்து எதையோ சாதித்துவிட்டது போல் அவர்களிடம் பகிர்ந்தேன். அவர்களும் என் ஆனந்தத்தை புரிந்து கொண்டு எங்களுக்கு luck இருந்தா அடுத்த வாரம் பாக்கலாம் என்று சொன்னார்கள்.
அப்படியே பூ நாரைகளின் இளஞ்சிவப்பு நிற றெக்கைகளை பார்த்தபடி ஒன்றும் இல்லாமல் அமர்த்திருந்தேன். உடை மரங்கள் நடுவில் சுற்றி யாரும் இல்லாத பகுதியில் நான் மற்றும் மனிதனென்று இருந்தேன். இல்லை வெறும் இருப்பென்று இருந்தேன். இல்லை இருந்தேன். இல்லையென்றால் நானே அங்கு இல்லாமல் இருந்தேனா. யார் அறிவார். அந்த நாரைகள் அறியுமோ என்னவோ.
அதன் பக்கத்தில் முப்பதில் இருந்து ஐம்பது உள்ளான் பறவைக் கூட்டமும் நின்றது. அவற்றைப் பார்த்துக்கொண்டே அங்கிருந்தேன் ஒரு மணி நேரம். பின் அடுத்த வாரமும் வருகிறேன் என்று பூ நாரை புது நண்பர்களிடம் விடைப்பெற்று கிளம்பினேன். அடுத்த வாரம் இவை இங்கிருக்குமா. நான் அறியேன்.அவை அறியுமா?இல்லை அவையும் அறியாதா?
சரவணன் சிவன்ராஜா
கருத்துகள்
கருத்துரையிடுக