அறம்

சென்ற வாரம் நண்பர் கிங்ஸ்லியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அறம் என்பதின் வரையறை என்ன என்பது பற்றிய ஒரு கருத்து அதுவாக உருவானது. நான் அவரிடம் “அறத்துக்கு நீங்க எப்படி சார் டெபிநிஷன் குடுப்பீங்க? “. “ சார் நான் அத பத்தி யோசிச்சது இல்ல. எனக்கு ரெண்டு நாள் டைம் குடுங்க யோசிச்சு சொல்றேன்” என்றார். அன்றில் இருந்து அறம் என்ற சொல் என்னுள் ஊழகச் சொல்லாக மாறியது. நான்கு நாட்களாக அறம் அறம் என்று என்னுள் பிய்தற்றிக்கொண்டே திரிந்து இது வரை என்னுள் நான் தொகுத்த அறம் என்னும் சொல்லின் வரையறை. இந்த சொல்லை அச்சடிக்கும் பொது வரை உள்ள என் மன நிலையின் பதில். இது எனது இறுதி வரையறை அல்ல. சரி வரையரைக்கு செல்வோம்.

அறம். இந்த வார்த்தையின் வேர் அற்றம் என்ற சொல்லில் இருந்து வந்ததாக எழுத்தாளர் ஜெ குறிப்பிடுகிறார். அற்றம் என்பதன் பொருள் எல்லை. இலக்கியங்களில் இந்த சொல் எக்காலத்தில் இருந்து வருகிறது என்று ஆராயும் அளவு எனக்கு இன்னும் வாசிப்பு வளரவில்லை. என் சிறிய வாசிப்பு வட்டத்தில் இருந்து அனுபவத்தில் இருந்தும் எழுதுகிறேன்.

பொதுவாக ஒன்றன் எல்லயை குறிப்பதே அறம் என்று நான் கருதுகிறேன். என் பார்வையில் அறம் இங்கே சில குறிப்பிட்ட சொல்லுக்கான அர்த்தத்தில் புரிந்து கொள்ள படுவதாக நான் உணர்கிறேன். ஒழுக்கம், தர்மம், நீதி போன்ற சொல்லுக்கு அறம் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் அறம் என்பது இரண்டு பெரும் பிரிவாக புரியப்படவேண்டும் என்று நான் கருதுகிறேன். அவை என்றைக்குமான அறம் அதை பேரறம் என்று குறிப்பிடுகிறேன். மற்றொன்று ஒவ்வொரு காலத்துக்குமான அறம் அதை வெறுமனே அக்காலத்திய அறம் அல்லது மானுட அறம் என்று குறிப்பிடுவோம்.

பேரறம்
மானுட அறம்

பேரறம்

 இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களும் தன்னுள் ஒரு விதியை தானே கொண்டுள்ளது. அவ்விதியை நாம் பேரறம் என்று கொள்ளலாம். உதாரணமாக சூரியனின் அறம் என்பது வெப்பத்தையும் ஒளியையும் உமிழ்வது. நிலாவின் அறம் பூமி என்ற பாறையை வட்டமிடுவது. ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளால் ஈர்க்கப்படும் புவி ஈர்ப்பு விசை அனைத்து பொருள்களின் அறம். இது போல் மண்ணில் வந்த ஒவ்வொரு உயிரும் தன்னை தான் வளர்ப்பதும் பெருக்கி கொள்வதுமே ஒவ்வொன்றின் அடிப்படை அறம். கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாவில் இருந்து யானை, திமிங்கலம் வரை இதுவே அடிப்படை அறம். இதில் மனிதனும் அடங்குவான்.

 இந்த அறமே வாழ்தலின் அடிப்படை என்று கொள்ளலாம். இதையே நாம் மண்ணில் வாழ்வதற்கான ஊன்று கோல் என்றே கொள்வோம். மானுடம் அன்றி மற்ற அனைத்து உயிர்களும் தங்கள் அறத்தில் ஒரு வித தெளிவுடனும் முடிவுடனுமே செயல் படுகின்றன. உதாரணமாக ஒரு புலி தனது அந்நேரத்திய இறையை தாண்டி பிரவற்றை சிந்தனை செய்யாது. அக்கணத்தின் பசி அக்கணத்தின் காமம் இதுவே அவற்றின் ஒட்டுமொத்தமாக வாழ்வின் அறமாக உள்ளது. போராடி போராடி தனது உணவை அடைந்தும் துணையை அடைந்தும் அது தனது வாழ்வை நகர்த்ததுகிறது. ஆனால் மானுடம் அவ்வாறில்லை.

தனது வாழ்தலின் போராட்டத்தைன்மையை குறைக்கும் ஒரு வழியாக மானுடம் கண்டடைந்த வழியே கூட்டு வாழ்வு அல்லது சமூக வாழ்வு. இது காட்டு மனிதனாக இருந்து ஒவ்வொரு காலகட்டமாக மனிதன் கண்டடைந்த ஒரு மாபெரும் பரிணாமச் செயல்பாடு. கூட்டு வாழ்வு மனிதன் தாண்டி மற்ற சில உயிரினங்களிடமும் உள்ளது ஆனால் அவை அக்கணத்தின் தேவையை சார்ந்த செயல்பாடோடு நிறை வாடைகிறது. ஆனால் மானுட சமூகம் தனது அக்கணத் தேவையையும் தாண்டி ஒரு மிக நீண்ட கால தேவையை கனவை பூர்த்தி செய்ய முற்படும் பொழுது இயற்கையாகவே அமைந்த அறங்கள் ஒரு எல்லையோடு நின்றதை உணரமுடிகிறது. ஆகவே மானுடம் தனக்கான அறங்களை தானே தொகுக்கத் துவங்கியது.

மானுட அறம்

சமூக வாழ்வு என்பதை நாம் ஒரு மாபெரும் இரு சக்கர வாகனத்தின் என்ஜினோடு ஒப்பிடுவோம். பல சிறு சிறு உபகரணங்கள் சேர்ந்து ஒட்டு மொத்தமாக ஒரு இயக்கமாக வெளிப்படுகிறது. அது போலவே மானுட சமூகமும். பல சிறு சிறு குழுக்களின் செயல்பாடுகளால் முன்னகர்வது இம்மானுடம். அது இயங்க ஒவ்வொரு இணக்குழுவும் தனக்கான அறங்களை தானே தொகுத்து முன்னகர்வதை வரலாறு முழுக்க நாம் காணலாம். இன்று நாம் காணும் அறம் எனும் கோட்பாடுகள் எல்லாம் ஒவ்வொரு காலமும் மாறி வருவதை நாம் கான முடிகிறது. 

இந்த அறக்கோட்பாடுகளை மானுடம் உருவாக்கியதால் அதை வலியுறுத்திவதும் மீண்டும் மீண்டும் சமூகத்தில் பேசி பேசி நிலை நிறுத்த வேண்டியது கட்டாயமாகிறது. இதை நாம் அக்காலத்திய நூல்கள திருக்குறள், நாலடியார், அறநெறி சாரம் போன்ற நேரடியான அறன் வலியுறுத்தும் நூல்களை காணலாம். மனு நீதி, அர்த்த சாஸ்திரம், ஹமுரபி சட்டம், போன்ற நேரடி சட்ட நூல்களில் காணலாம். இலக்கியமாக மஹா பாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் அறத்தை கதா பாத்திரத்தின் வாழ்வியலாக பார்க்கலாம். 

இதை இன்றைய நவீன கால கட்டத்தில் திரைப்படங்கள் வழியாகவும், நாடங்கங்கள் வழியாகவும், கைபேசி வழியாகவும் முடிந்த அளவு அறம் வலியுறுத்தப் படுகிறது. தற்காலத்தில் கல்வி கூடங்கள் வழியாகவும் அறம் போதிக்கப் படுகிறது. உதாரணமாக பொறியியல் கல்லூரிகளில் தொழில் தர்மம் (proffessional ethics) ஒரு பாடமாகவே கற்பிக்கப்படுகிறது. அதன் நோக்கம் நீ ஒரு தொழில் செய்ய வருகிறாய் அதன் அறம் இதுதான். இதன் எல்லை இதுதான் என்று ஒரு வலியுறுத்தல் தான். இப்படி ஒவ்வொரு இடத்துக்குமான அறத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். 
உதாரணமாக ஒரு பள்ளியில் நான் ஆசிரியராக பணியாற்றினால் அதற்கான அறத்தை நான் உள்வாங்க வேண்டியுள்ளது. மாணவர்களின் வளர்ச்சியில் முக்கியத்துவம் இருப்பதால் நான் திடீரென்று வேலையை விட்டு நிற்பது அறம் ஆகாது. இப்படி மற்ற அனைத்து தொழிலிலும் வைத்து சிந்தித்து பார்த்தால் புரியும். இது ஒரு உயிரினமாக எனக்கு தேவை இல்லாத அறம் ஆனால் மானுடமாக ஒரு சமூகத்தில் வாழ நானே திணித்துக் கொள்வது இன்றியமையாததாகிறது.

இது போலவே இல்லறம், துறவறம் என்று சமூக வாழ்வின் அனைத்து அடிப்படைகளும் அறம் என்ற கயிறுக்குள் கொண்டு வரப்பட்டத்தை நீங்கள் உணரலாம். இதை திருவாசகத்தில் மாணிக்கவாசகர் “ அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி “ என்று அறத்தை கயிறு என்று பாடுவதை காணலாம். எல்லாம் மானுடம் என்னும் இயந்திரம் தொடர்ந்து இயங்க தேவை ஆனவை என்பதையும் உணரலாம்.

மானுடம் பல வித மனிதர்களை கொண்டுள்ளது. அதில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணங்களைக் கொண்டு பிறக்கிறான். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் சத்தவம், ரஜோ, தமஸ் எனும் முக்குணங்களில் ஏதொ ஒன்றுடன் இருப்பதாக சாங்கிய தத்துவம் கூறுகிறது. மனிதனும் அது போலத் தான் அவனவனின் குணங்களுக்கு ஏற்ப அவனவன் வாழ்வு அமைகிறது. இதை அறத்தில் கொண்டு கட்டுவது மாபெரும் மடமை என்றே கருதுகிறேன். அறம்னு ஒன்னு இருக்கு அது ஒன்ன விடாது என்று பலர் பேசுவதை கேட்டிருக்கிறேன். வள்ளுவர் தனது அறம் அதிகாரத்தில் “ அறத்தாறு இதுவென வேண்டாம் சீவீகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை “ என்று உறுதி செய்கிறார். பல்லக்கை சுமப்பதும் பல்லக்கில் அமர்வதும் அறத்தின் பலன் என்று சொல்லவேண்டாம் என்கிறார் அவர்.

ஒரு விதை முளைப்பதற்கு இயற்கை அதை தேர்ந்தெடுப்பது அதன் அறத்திற்காகவே. தேர்ந்தெடுக்கப் பட்ட விதை வளர்ந்து மரமாவது அந்த விதையின் அறம். அது வளர மறுக்குமாயின் அதை அளிப்பது இயற்கையின் அறம். நாமும் தேர்ததேடுக்கப்பட்ட விதைகள் தான். எனில் நமது கடமையே நமது அறம். இதை எங்கு கொண்டு பொருத்துவது என்பது என்னுள் இன்னும் சீரமையவில்லை.

முடிவாக அறதிற்காக வாழ்கிறோமா? அல்லது வாழ்வது அறத்திற்காகவா? என்ற கேள்விக்கு என் பதில் வாழ்தலே அறம் என்று நான் கருதுகிறேன். இது வரை நான் பகிர்ந்தது இன்னோடி வரை நான் உணர்ந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னை அழைத்த பூ நாரைகள் - புத்தளம் பயண அனுபவம் (07-12-2025)

முதல் கடிதம்