கடந்த ஏப்ரல் மாதம் சென்ற திருப்புடைமருதூர் பயண அனுபவம்


கடந்த ஏப்ரல் மாதம்(2025) தமிழ் புத்தாண்டை ஒட்டி கிடைத்த நான்கு நாட்கள் விடுமுறையில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிற்பம் மட்டும் ஓவியம் பார்க்க திட்டமிட்டோம். அதன் படி சென்னையில் இருந்து நண்பர்கள் ஜெயவேல் அண்ணன், ஞான தீபன் அண்ணன் மற்றும் சத்ய நந்தினி அக்கா மூன்று பேரும் வியாழன் காலை கிளம்பி மாலை ஊர் வந்து சேர்ந்தனர். இரண்டு நாட்கள் கன்னியகுமரி மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோவில் ஆகிய இடங்களில் சிற்பங்களை பார்த்து விட்டு ஞாயிறு திருப்புடைமருதூர் ஓவியங்கள் பார்க்கத் திட்டமிட்டிருந்தோம். இடையில் பெங்களூரில் இருந்து பிரவீன் அண்ணாவும் தர்மபுரியில் இருந்து இளஞ்சேழியன் அண்ணாவும் எங்களோடு சேர்ந்து கொண்டனர்.

சென்ற ஜனவரி மாதமே நானும் ஜெயவேல் அண்ணனும் அங்கு சென்றோம். கோவிலில் பொறுப்பாளராக இருந்து வரும் ரமேஷ் அண்ணனிடம் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்கள் விருப்பத்தை தெரிவித்து ஓவியங்களை பார்க்க அனுமதி தருமாறு கோரிக்கை வைத்தோம். அவரும் ஒத்து கொண்டு ஓவியங்களை பார்க்க அனுமதித்தார். ஐந்து தளத்தில் உள்ள ஓவியங்களையும் ஒருமணி நேரம் பொறுமையாக பார்த்தோம். ஆனால் ஒன்றும் புரியாமல் புரிந்த சில ஓவியங்களை மட்டும் ரசித்து விட்டு வந்திருந்தோம். அப்போதே மீண்டும் ஒரு முறை இந்த ஓவியங்களை பற்றி படித்துவிட்டு வரவேண்டும் என்று சபதம் எடுத்து ஊர் திரும்பினார் அண்ணன். 

அதன் படி ஆய்வாளர் திரு. சா. பாலுச்சாமி அவர்களின் “ திருபுடைமருதூர் ஓவியங்கள் “ புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தார். அவரோடு சேர்ந்து பயணிக்கும் நண்பர்களும் விருப்பம் அறிந்து ஆளுக்கு ஒரு தளமாக பிரித்து அதில் உள்ள ஓவிங்களை பற்றி படிக்க ஆரம்பித்தார்கள். இப்படி கடந்த மூன்று வாரமாக தயாரானோம்.

சென்ற ஞாயிற்றுக் கிழமை காலையிலே கிளம்பி திருப்புடைமருதூர் சென்றோம். ரமேஷ் அண்ணனின் கைபேசி எண் எங்களிடம் இருந்ததால் முன்னரே அவரிடம் பேசிவிட்டு வந்திருந்தோம். அவரும் எங்களை பரிவோடு அனுமதித்தார். ஒன்பதரை மணிக்கு முதல் தல ஓவியங்களை பார்க்கத்துவங்கினோம். அங்கு சென்ற பின்னர் தான் ஒவ்வொருவரும் படித்த ஓவியங்களை பற்றி விளக்கும் போது அது எங்களின் ரசனைக்கு போதுமான அளவோடு இல்லை என்பதை உணர்ந்தோம். கையில் புத்தகத்தோடே சென்றிருந்தோம். அதை எடுத்து ஒவ்வொரு ஓவியமாக ஒருவர் விளக்கி வாசிக்க வாசிக்க பிறர் அதை ரசித்து மெய் சிலிர்த்தோம்.

நாயக்கர் மற்றும் விஜயநகர காலகட்டத்தின் ஓவியங்கள் இன்னும் புதிது போல் அப்படியே உள்ளது. முதல் தளத்தில் திருஞானசம்பந்தரின் அனல் வாதம் புனல் வாதம் ஓவியமாக தீட்டப்பட்டுருந்தது. இரண்டு சுவர்களில் மூன்று வரிசையாக ஒவ்வொரு காட்சியும் மிகத்துல்லியமாக வரையப்பட்டிருந்தது. முதல் தளத்தின் சாளரம் அருகே வரையப்பட்ட நரசிம்மர் இரணிய வதம் வேறெங்கிலும் இல்லாத வகையில் மிகத் தனித்துவமாக உள்ளது.

இரண்டாம் தளத்தில் ஒரு போர் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. 1525 இல் விஜயநகர அரசுக்கும் திருவிதாங்கூர் அரசுக்கும் இடையில் நடந்த ஆரல்வாய்மொழிப் போரும் அதன் பின் பாண்டிய மன்னன் மீண்டும் மூடி சூடியதும் நான்கு வரிசைகளாக ஒவ்வொரு காட்சியாக மிகத்துல்லியமாக வரையப்பட்டிருந்தது. இரண்டாம் தளத்தில் அரேபியர்களின் இந்திய குதிரை வியாபாரம் ஒரு முழு சுவற்றில் படமாக வரையப்படிருந்தது. கப்பலில் அரேபியர்கள் குதிரைகளை கொண்டு வந்து இறக்கும் காட்சியை அப்படியே திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலில் சிற்பமாகவும் பார்த்திருந்தோம்.

இரண்டாம் தளத்தில் இருந்த சாளரம் அருகே வரையப்பட்டிருந்த ராம லக்ஷ்மண ஓவியங்கள் தரத்தின் உச்சம். ஓவியங்கள் சில இடங்களில் ஆங்காங்கே உதிர்ந்து இருந்தாலும் பாலுசாமி அவர்களின் புத்தகம் அங்கே என்ன ஓவியங்கள் இருந்திருக்கலாம் என்று ஒரு தெளிவான ஊகத்தை கொடுத்தது. 

இரண்டு தளம் பார்த்து முடிக்கவே மதியம் ஒரு மணி ஆகவே சிறிது இடைவெளி எடுத்து அருகில் உள்ள பெரிய ஊரான மூக்கூடலுக்கு சென்று தேனீர் மற்றும் சிற்றுண்டி உண்டோம். அரை மணி நேரம் கூட நீடிக்காத இடைவெளி சட்டென்று முடிந்தது. திருப்புடைமருதூர் பறவைகள் சரணாலயம் என்பதால் அங்கு வந்த பறவைகள் சிலவற்றை பார்க்கலாம் என நானும் செழியன் அண்ணனும் வெளியே நின்று மரங்களை தொலை நோக்கி மூலமாக பார்த்தோம். கிடைத்த ஐந்து நிமிடத்தில் எங்களால் சங்குவளை நாரைகளை மட்டுமே பார்க்க முடிந்தது. அனைத்தும் வெயிலில் உக்கார்ந்து வாயை திறந்து வைத்துகொண்டிருந்தது. அந்த வெயிலில் மரங்களுக்கு மேல் இலஞ்சிவப்பு நிற பூங்குலைகள் போல் அத்தனை போலிவோடு இருந்தது அந்தக் காட்சி.

அந்த சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் எங்கள் ஓவியம் பார்க்கும் படலம் தொடர்ந்தது. மூன்றாம் தளம் மற்றும் நான்காம் தளம் முழுக்க திருவிளையாடல் புராணம் கந்த புராணம் மற்றும் தல புராணம் ஓவியங்களும் வரையப்பட்டிருத்தன அதிலும் நான்காம் தளம் வரையப்பட்டிருந்த கந்த புராண ஓவியத்தில் வள்ளி யானைக்கு பயந்து ஓடிச்சென்று முருகன் மேல் தொற்றி கொள்ளும் அத்தனை அழகு. இடுப்பில் குழந்தை போல் தொற்றிக்கொண்டு இரண்டு கால்களையும் முருகனின் இடுப்பை சுற்றி அமர்ந்திருக்கும் காட்சி பேரழகு. 

அந்த தளத்தில் உள்ள மற்றுமொரு மறக்கமுடியாத ஓவியம் குழல் ஊதும் கிருஷ்ணன் ஓவியம். கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊத அதில் சுற்றி உள்ள அணைத்து உயிர்களும் மயங்கி பரவச நிலையில் உள்ளன. படமெடுத்து சீரும் பாம்பின் தலை மேல் அமர்ந்து எலி ஒன்று இசையை ரசிக்கிறது. இளம் பெண்னொருத்தி தன் மேலாடையும் கீழாடையும் அவிழ்ந்து விழுந்தது தெரியாமல் குழலில் மூழ்கி உள்ளாள். வாய் பிளந்து நின்றோம் அனைவரும்.

பாம்பைனை மேல் படுத்துள்ள நாராயணன் நாபியில் மலரந்த தாமரையில் அமர்ந்து தவம் புரியும் நான்முகன். பார்க்கடலில் துள்ளும் மீன்களும் சங்குங்களும் ஆமைகளும் இன்புற்று அலய. பாம்பைனை நோக்கி வரும் இரண்டு அரக்கர்களை நோக்கி சீருகிறது ஐந்து தலை வாசுகி. அந்த சுவர் அருகில் தசவதார ஓவியம். இரண்டும் பிரமிப்பு ஊட்டும் வண்ணம் அமைந்தது.

ஐந்தாம் தள ஓவியங்கள் கிட்ட தட்ட அனைத்தும் உதிர்ந்துவிட்டது. ஐந்தாம் தளம் எங்கள் எடையால் மிகவும் அதிர்ந்ததால் பயந்து பயந்து குத்த வைத்து உக்கார்ந்து பார்த்தோம். காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்த ஓவியப் பயணம் மாலை ஐந்தரை வரை நீடித்தது. இடை இடையே ஜெயவேல் அண்ணன் எங்களுக்கு தண்ணீர் கொண்டுவர கீழ் இரங்கி சென்று கொண்டு வந்து கொடுத்தார்.

கோபுர தளங்களில் உள்ள மர சிற்பங்களும் விதிவிலக்கல்ல. ஒவ்வொன்றும் பார்த்து தீராது மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகோடும் போலிவோடும் விளங்கியது. ஆளுக்கு ஒரு மூலையில் சென்று ஒவ்வொன்றாக பார்த்து “ இங்க பாருங்க யோக பட்டைல இருக்க முனிவர் “ “ இங்க பாருங்க வியாக்கற பாதர் “ என்று கூவ பிறர் உடனே ஓடி சென்று அதை பார்த்து வியந்தோம். 

எப்படி காற்றில்லாமல் வெப்பத்தில் அந்த கோபுரத்திற்குள் அவ்வளவு நேரம் நின்றோம் என்று இப்போது யோசித்தால் ஒரு விடையும் கிடைக்கவில்லை. அறிதல் ஒன்று மட்டுமே மய்யமாக அங்கே இருந்த அனைவரும் வேறு ஒன்றும் யோசிக்காமல் ஓவியத்திலேயே முழு நாளும் திளைத்தோம். கிட்ட தட்ட எட்டு மணி நேரம் வாசித்தும் வாய் வலிக்காமல் சலிப்பு தட்டாமல் மேலும் மேலும் என்று ஆர்வத்தோடு இருந்தது உண்மையில் மிகவும் மகிழ்வான தருணங்கள். 

முடிந்து கீழ் இரங்கி நாறும் பூ நாதரை தரிசித்துவிட்டு தாமிரபரணியில் குளித்து கோவில் அருகில் உள்ள ஒரு சுக்கு காபி கடையில் பருப்பு வடையும் சுக்கு காபியும் குடித்தோம். அது முடியவே பிரவீன் அண்ணன் கல்லிடை ரயில் நிலையத்தில் ஊருக்கு கிளம்ப பிறர் பிரம்ம தேசம் கைலாசநாதர் கோவிலை நோக்கி பயணித்தோம்.

இந்த பயணம் கற்றத் தந்தது எண்ணற்றது. முடிவில்லா ரசனை. வாழ்வின் அழைக்களிப்பில் ஆயிரம் வேலை பளுக்களுக்கு இடையில் கலையே எங்கள் வாழ்வின் முடிவற்ற தேடல் என்று தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுடன் பயணிப்பது என்னப் போன்ற ஒரு ஆரம்ப கட்ட வாசகனுக்கு கிடைக்காத ஒன்று. இன்னும் வரும் காலங்களில் நிறைய திட்டமிட்டுள்ளார்கள். அடுத்த வாரம் சமணர் ஓவியங்கள் பார்க்க திட்டமிட்டுள்ளார்கள். 


சரவணன் சிவன்ராஜா



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னை அழைத்த பூ நாரைகள் - புத்தளம் பயண அனுபவம் (07-12-2025)

அறம்

முதல் கடிதம்